மும்பை,:மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் நிகழ்ச்சி நடந்த இடத்தை பசு கோமியம் தெளித்து, சிவசேனா கட்சியினர் துாய்மைப்படுத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களுக்கும், ஷிண்டே ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இரு தரப்பினரும் மோதியதால் பதற்றம் நிலவியது. இந்நிலையில், அவுரங்காபாத் நகரில் சமீபத்தில் முதல்வர் ஷிண்டே பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு வந்த உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள், அந்த இடத்தை பசு கோமியம் தெளித்து துாய்மைப்படுத்தினர். ஒரு பக்கெட்டில் பசு கோமியத்தை எடுத்து வந்த அவர்கள், அதை அந்த இடம் முழுதும் தெளித்தனர்.
இதையறிந்த ஷிண்டே ஆதரவாளர்கள் அங்கு குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு, அவர்களை சமாதானப்படுத்தினர். சிவசேனா கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த அரசை கவிழ்த்து விட்டு, பா.ஜ., ஆதரவுடன் முதல்வரானார். இதனால் உத்தவ் தரப்பினருக்கும், ஷிண்டே தரப்பினருக்கும் தொடர்ந்து மோதல் நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement