கோவிட் பெருந்தொற்றின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் நிகழ்ந்தன. ஆனால் அந்தக் காரணத்தால் இறப்புகள் ஏதும் நிகழவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்தது.
இதனிடையே, கோவிட் இரண்டாவது அலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட இறப்புகளைத் தணிக்கை செய்யும்படி, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்தது.

சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு திங்களன்று, ராஜ்யசபாவில், 137வது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் “கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, சுகாதார உள்கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டது. நோயாளிகளின் குடும்பத்தினர் ஆக்ஸிஜனுக்காக கெஞ்சுவது, ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்காக வரிசையில் காத்திருப்பது போன்ற பல நிகழ்வுகள் நடந்தன. மருத்துவமனைகளில் சிலமணி நேரம் மட்டும் உயிர்வாயு கொடுக்கப்பட்டது போன்ற செய்திகள் வெளியாகி மக்களிடையே அவநம்பிக்கையை உண்டாக்கியது.
மேலும், 123-வது அறிக்கையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தில் பற்றாக்குறை உண்டாகும் என அரசுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் 2020-ம் ஆண்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளையில் நாடு தன்னிறைவடைந்தது எனச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்ததை குறித்து குழு ஏமாற்றமடைகிறது.
இவர்களின் வெற்றுக் கூற்று கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது கொடூரமாக அம்பலமாகியது. சுகாதார அமைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கவும் அரசு தவறியது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட கோவிட் இறப்புகளின் விவரங்களை வழங்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பதிலளித்தன. இவை எதுவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்ததாக உறுதிப்படுத்தவில்லை.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கோவிட் பெருந்தொற்றின்போது ஏற்பட்ட இறப்புகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது நெருடலாக உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட இறப்புகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடுகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதோடு அரசாங்க நிறுவனங்களிடம் இருந்து அதிக வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் எதிர்பார்க்கிறோம்’’ என நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது.