ஈரோடு மாவட்டத்தில் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மனைவி உயிரிழந்துள்ளார். மேலும் கணவர் படுகாயமடைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அவ்வையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சங்கரன்(72). இவரது மனைவி ருக்மணி (65). இந்நிலையில் இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மொபட்டில் கோபிசெட்டிபாளையம்-கொளப்பலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது காமராஜர் நகர் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ருக்மணி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து கணவர் சங்கரன் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.