சென்னை : இயக்குநராகும் கனவுடன் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நித்யா மேனன்.
ஆனால் இவரை நடிகையாக்கி அழகு பார்த்தது சினிமாத் துறை. ஆனால் இந்த தளத்திலும் நடிப்பு ராட்சசி என்ற பெயரை வாங்கியுள்ளார் நித்யா மேனன்.
இவரது நடிப்பில் வெளியான படங்களில் இவரது கேரக்டர் கண்டிப்பாக பேசப்பட்டுவிடுகிறது. ரசிகர்களை அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் கவர்ந்து வருகிறார் நித்யா மேனன்.
நடிகை நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் நடிகை, பின்னணி பாடகி என பல்வேறு தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தென்னிந்திய மொழிகளில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜூ ஆகிய படங்களுக்காக இவருக்கு பிலிம்பேர் விருதுகள் கிடைத்தன.

தமிழில் சிறப்பான படங்கள்
தமிழில் இவர் நடிப்பில் வெளியான 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகம், மெர்சல் போன்ற படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் துல்கருடன் இணைந்து இவர் நடித்திருந்தார். காதலை வித்தியாசமான கோணத்தில் இந்தப் படம் காட்டியது.

முன்னணி நடிகர்களுடன் நடிப்பு
தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, உதயநிதி உள்ளிட்டவர்களுடன் இவர் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக அதிகமான மலையாளப் படங்களில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

திருச்சிற்றம்பலம் படம்
தனுஷுடன் இணைந்து சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளது திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தில் தனுஷுக்கே டப் கொடுக்கும் வகையில் இவரது நடிப்பு அமைந்துள்ளது. சில இடங்களில் தனுஷையே தன்னுடைய நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விட்டதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இயல்பான கதைக்களம்
தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான இந்தப் படம் பிரம்மாண்டங்கள் எதுவும் இல்லாமல் கதையை மட்டுமே நம்பி களமிறங்கி 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறார். தனுஷின் நான்கு படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியான நிலையில் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானதால் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டரில் இணைந்த நித்யா மேனன்
இந்நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார் நித்யா மேனன். இதையடுத்து அடுத்தடுத்த பதிவுகளை அவர் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய அழகான புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ள அவர், தனித்துவமாக இருக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.