விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அடிக்கல்! ஸ்டாலின் தொடங்கி வைத்த பணிகள்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ. 70.57 கோடி மதிப்பில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர்

அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்

மதுரையில் அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகருக்கு வருகை புரிந்தார்.

அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, காளையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய முறைப்படி வழி நெடுகிலும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மேடை அருகில் அரசு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு பணிகள் குறித்த விளக்க அரங்குகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முன்னதாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்தில் மரக்கன்றுகளை முதல்வர் நட்டினார்.

அதைத்தொடர்ந்து ரூ.70.57 கோடியில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் கூடிய புதிதாக ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாண்டிதேவி என்ற மாற்றுத்திறனாளி குழந்தையின் தாயாருக்கு அவரின் கோரிக்கையை ஏற்று அங்கன்வாடி பணியாளர் ஆணையை வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர.

மேலும் இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.