பெங்களூரு:ஊழல் வழக்கு தொடர்பாக, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன், மருமகன்கள், பேரன் உட்பட ஒன்பது பேர் மீது, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2008 — 10ல் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்தன. இதில் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம், 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைப் பற்றி விசாரணை நடத்தும்படி, பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், ‘எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கு குறித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். ‘வரும் நவம்பர் 2 க்குள் அறிக்கை அளிக்க வேண்டும்’ என, லோக் ஆயுக்தா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, மக்கள் பிரதிநிதிதிகள் சிறப்பு நீதிமன்றம், 14ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, எடியூரப்பா, அவரது இளைய மகன் விஜயேந்திரா, பேரன் சசிதர் மரடி, மருமகன்கள் சஞ்சய் ஸ்ரீ, விருபாக் ஷப்பா யமகனமரடி, கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர், ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம் உட்பட ஒன்பது பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.இதனால் எடியூரப்பா குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் லோக் ஆயுக்தா வழக்கில் முதல்வர் பதவியை இழந்து, சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement