புதுடெல்லி: ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பு சார்பில் நடைபெறும் விஜயதசமி விழாவில், 92 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய விருந்தினராக பெண் ஒருவர் பங்கேற்கிறார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 92 ஆண்டுகள் முடிவடைகின்றன. இந்த அமைப்பு ஆண்டுதோறும் தசரா கொண்டாட்டத்தின் கடைசி நாளன்று விஜயதசமி விழாவை மிக விமரிசையாக நடத்தி வருகிறது. நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க ஆண்டுதோறும் முக்கிய விருந்தினர்களை அழைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் விஜயதசமி விழாவுக்கு, முதல் முறையாக முக்கிய விருந்தினராக பெண்ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு மலையேற்ற வீராங்கனை பத்மஸ்ரீ சந்தோஷ் யாதவுக்கு கிடைத்துள்ளது.
சமீப காலமாக தற்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பெண்களை பற்றி பல்வேறு சிறப்பான கருத்துக்களை பேசி வருகிறார். குறிப்பாக, ‘‘ஜகத் ஜனனி என்று போற்றும் நம்மில் பலரும் வீடுகளில் பெண்களை அடிமையாக நடத்துவது தவறு’’ என்று கருத்து தெரிவித்திருந்தார். உடல் ரீதியாக ஆண்களைவிட பல மாற்றங்கள் கொண்டிருந்தாலும் பெண்களும் சரிநிகர் திறமை பெற்றவர்கள். அவர்கள் முன்னேற்றத்தை நம் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், விழாவுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமை வகிக்க உள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘விரைவில் 100 வருடங்களை நெருங்கும் எங்கள் அமைப்பு, பெண்கள் உரிமை மீது கவனம் செலுத்த உள்ளது. இதன்மூலம், பெண்களுக்கான பிரிவையும் பலப்படுத்துவது எங்களது நோக்கம். இந்திய அரசியலை தீர்மானிப்பவர்களாக இனி பெண்கள் இருக்கும் நிலை உருவாகி வருகிறது’’ என்றனர்.
இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை 2 முறை தொட்ட முதல்பெண் சந்தோஷ் யாதவ். இவர் முதல் முறையாக மே 1992-ம் ஆண்டிலும், 2-வது முறையாக மே 1993-ம் ஆண்டிலும் எவரெஸ்ட் சிகரம் தொட்டிருந்தார். இதற்காக சந்தோஷ் யாதவுக்கு தேசிய சாதனையாளர் விருது 1994-லும் 2000-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இதற்கு முன், ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவில் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ஆனால், ஆர்எஸ்எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றதற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.