சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 22 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை முறையாகப் பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயல் அலுவலரின் பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம், காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தற்போது காலியாக உள்ள 22 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.