ஆன்லைன் சூதாட்ட தடை: வெளியானது அரசாணை- என்னென்ன எச்சரிக்கைகள்?

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பல தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்ட மசோதாக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கினார்.

இது குறித்த அரசாணையும் வெளியாகியுள்ளது. அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையமானது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல், விளையாட்டை வழங்குவோரின் செயல்பாடுகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் ஆன்லைன் விளையாட்டு நடத்துவோருக்கு பதிவு சான்றிதழை ஆணையம் வழங்கும் எனவும், உரிய சான்றிதழ் பெறாமல் உள்ளூர் ஆன்லைன் விளையாட்டுகளை நடத்த முடியாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளின் பட்டியல் வெளியிடப்படும் எனவும், தேவைக்கேற்ப இந்த பட்டியல் மாற்றி அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை நடத்த 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவுச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பணம், பிற பொருட்களை வைத்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆன்லைன் விளையாட்டுக்கான பண பரிமாற்றத்தில் வங்கியோ, நிதி நிறுவனமோ ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு ஆன்லைன் விளையாட்டுக்கு எதிரான புகாரைப் பெற்று தீர்வு காண்பதற்கும், எந்தவொரு நபரையும் நேரில் அழைத்து விசாரிக்கவும், ஆணையம் விதிக்கும் தண்டனையில் நீதிமன்றம் தடைவிதிக்க முடியாது.

ஆன்லைன் விளையாட்டுக்களில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்கள் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்களை நடத்துவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.