குறைந்த வருமானம் பெறும், கஷ்டமான குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவியைப் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பியும் பாஸ்குவல் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் பலர் சமுர்த்திப் பயனாளிக்கான தகுதி இருந்தும் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிககம் (06) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிககம்:
மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் பலர் சமுர்த்திப் பயனாளிக்கான தகுதி இருந்தும் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள். 42பேரளவில் மட்டக்களப்பில் மாத்திரம் சமுர்த்திப் பயனாளிக்கான தகுதியாளர்கள்; காணப்படுகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பில் ஒரு தாயின் மகன் மத்திய கிழக்குக்கு தொழிலுக்குச் சென்றால் அல்லது ஒரு மகன் மோட்டார் சைக்கிள் வாங்கினால், தாய்க்கு வழங்கிய சமுர்த்தி உதவியை நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் இரண்டு அல்லது மூன்று மாடி வீடு உள்ளவர்கள் தொடர்ந்தும் சமுர்த்தி உதவியைப் பெறும் நிலை காணப்படுகின்றது. இதற்குக் காரணம் மட்டக்களப்பில் 345கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. அதில்; சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் என்ற நியமனத்திற்கு 154 வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதனால் சிலவேளை ஒரு சமுர்த்திஅபிவிருத்தி அலுவலர் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பணி புரிய வேண்டியிருக்கும்.இந்நிலையில் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் தேவை காணப்படுகின்றது அத்துடன் தனது மகன் வெளிநாடு சென்றதால் தனது சமுர்த்தி நீக்கப்பட்டதாக ஒரு தாய் நேரடியாக முறையிட்டுள்ளார். இதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியும்?
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை சமுர்த்தி நிவாரண உதவி பெறுபவர்;கள் காணப்படுகிறார்கள்? அவர்களில் எத்தனை பேருக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுகின்றன?
அண்மைக் காலமாக அதிகரித்துள்ள குறைந்த வருமானம் பெறுபவர்கள் எவ்வாறு அரசின் நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்?
அதற்குப் பதிலளித்த சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பியும் பாஸ்குவல்
மட்டக்களப்பில் 63%,திருகோணமலையில் 55%, யாழ்ப்பாணத்தில் 53%, கிளிநொச்சியில் 69% குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் மற்றும் ஜீவனோபாயத்திற்குக் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவி வழங்குவது சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதான செயற்பாடாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில 2020 செப்டம்பர் 1 திகதியில் 98,773 பேர் சமுர்த்தி நிவாரண உதவியைப் பெறுகிறார்கள். அவர்கள் 420 ரூபா, 1900 ரூபா, 3200 ரூபா, 4500 ரூபா, ஆகிய பண உதவிகளைப் பெறுபவர்களாக வகைப்;படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அண்மையில் இவர்களுடன் 3100ரூபா, 3000ரூபா ஆகிய விசேட கொடுப்பனவைப் பெறுபவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்
மாதந்த வருமானத்திற்கு ஏற்ப வருமானச் சுட்டியில் கீழ் மட்டத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலானவர்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவி கிடைப்பதில்லை என்ற அதங்கம் காணப்படுகிறது.
கடந்த காலங்களில் கொரோனா தொற்றுக் காலத்தில் மற்றும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார அசமந்த நிலை காரணமாக மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் பொருளாதார மந்த நிலையினால் சிரமப்படுபவர்களின் நிலமைகளை உயர்த்துவதற்கு உதவி வழங்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சுட்;டிக்காட்டினார்.
அதற்காக 2019இல் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 26,957 குடும்பங்களுக்கு (காத்திருப்புப் பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்கள்) 72.3மில்லியன் ரூபா நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சமுர்த்திப் பயனாளிகள் அனைவருக்கும் மற்றும் வருமானச் சுட்டியில் கீழ் மட்டத்திலுள்ள அனைவருக்கும் இந்நிவாரண உதவிகள் வழங்கவில்லை. ஏனெனில், சமுர்த்தி நிவாரண உதவிப் பட்டியலில் அதனைப் பெறுவதற்குப் சமூகத்தில் பொருத்தமானவர்கள் யார்? மற்றும் பொருத்தமற்றவர்கள் யார்? என அடையாளம் காண்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.
அதனால் இந்நிலைமைகளை அவதானித்து, அதற்குத் தீர்வாக செயற்படுவதுடன், குறுங்காலத் திட்டம் மற்றும் உடனடி உதவியாக இவ்வாண்டு மே, ஜூன், ஜூலை மாதங்கள் வரை, மற்றும் எதிர்வரும் மாதங்களிலும் உலக வங்கி உதவித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களான சமுர்த்தி நிவாரண உதவி பெறுவதற்கு எதிர்பார்க்கப்படும் 42,644 குடும்பங்களுக்கு, முதியோர் கொடுப்பனவு வழங்குவதற்காக கணக்கிடப்பட்டுள்ள 698 குடும்பங்களுக்;காக, விசேட மற்றும் அங்கவீனக் கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் 245 குடும்பங்கள் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவைப் பெறுபவர்களாக எதிர்பார்க்கப்படும் காத்திருப்புப் பட்டியலில் உள்ள 8பேர் ஆகியோர்களுக்காகவும் மாதாந்தம் தலா 5000ரூபா வழங்கப்பட்டது.
அத்துடன் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களுக்காக ஆசிய வங்கியின் நிதி உதவியின் கீழ் தலா 5000ரூபா வீதம் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒழுங்கற்ற மற்றும் பல்வேறு அரசாங்கங்கள், அரசியல் செயற்பாடுகளின் கீழ் கணக்கெடுப்புத் தரவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள முறைக்கு ஏற்பவே கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்தும் இவ்வொழுங்கற்ற முறையை முன்னெடுத்துச் செல்லாது, ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய சமூக நலன்புரி சபையின் வெளிப்படைத்தன்மையான முறையொன்றினால், வர்த்தமானி அறிவித்தல் ஊடாக எதிர்வரும் 15திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்பட்டு, கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்,; ஆகியோர் ஊடாக குறைந்த வருமானம் பெறும், கஷ்டமான குடும்பங்கள் அனைவருக்கும் இதற்காக பிரதேச செயலாளரிடம் விண்ணப்பிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதும், தரவுகள் சேகரிக்கப்பட்டு, அதற்கு , முறைப் புள்ளிகள் போன்று புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெட்டுப்புள்ளிகள் வழங்கப்பட்டு, சமுர்த்தி நிவாரண உதவி பெறுவதற்குப் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். இது தொடர்பாக சமூக நலன்புரி சபைகளுக்கு கலந்துரையாடல் மூலம் அறிவூட்டல்கள் வழங்கப்படும்.
தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. பொருத்தமற்றவர்கள் காணப்பட்டால் அது பற்றி முறைப்பாடு முன்வைக்கலாம். அம்முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்காக விசேட குழு அமைக்கப்படவுள்ளது.
அக்குழுவில் சுயாதீன நிறுவனங்களின் இருவருக்கு பங்கு பற்ற வாய்ப்பளிக்கப்படும். அவற்றிற்கிணங்க ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்படைத்தன்மையான முறையில் இந்நிவாரண உதவிகளைப் பெறுபவர்களை இவ்வாண்டு இறுதிக்கு முன்னர் தெரிவு செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் சமூகத்தை வலுவூட்டுவது தான் எமக்கு அவசியமாகும். மட்டக்களப்பு மாவட்டத்திலும் முழு இலங்கையிலும் வினைத்திறனான வலுவூட்டலை வழங்கி, நிவாரணத்துடன் உறுதியான சமூகத்தைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார். அதனால் மட்டக்களப்பின் கைத்தொழில் அபிவிருத்தி, மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடத்தை நிரப்புதல் போன்ற விடயங்கள் தொடர்பாக செயற்பட சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் இராஜாங்க அமைச்சர் அனுபா பியும்
பாஸ்குவல் அழைப்பு விடுத்தார்.