தாம்பரம்: வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆறு தொடங்கும் கூடுவாஞ்சேரி ஆதனூர் கிளை கால்வாய் ரூ. 20 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2 வாரங்களில் தொடங்க உள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வடிகால்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நீர்வழிக் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் வழியாக மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்காக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முக்கிய நீர்வழித்தடமான அடையாறு மற்றும் அதன் கிளை கால்வாய் உள்ளிட்டவற்றில் நீர்வளத் துறை மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடையாற்றில் தங்குதடையின்றி மழைநீர் செல்ல வசதியாக தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி அடையாறு ஆறு தொடங்கும் கூடுவாஞ்சேரி பகுதியில் சுமார் 3,200 மீட்டர் தூரம் கால்வாய் மற்றும் அடையாற்றின் கிளை கால்வாய் ரூ.20 லட்சத்தில் சீரமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து நீர்வளத் துறை பொறியாளர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, வடிகால் வழியாக மழைநீர் வேகமாக வடிவதற்கு ஏதுவாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்படாமல் இருக்கவும் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும் நீரோட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய அனைத்து பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
அடையாறு ஆறு தொடங்கும் கிளை கால்வாய்களில் கூடுவாஞ்சேரி, பொத்தேரி, நின்னக்கரை, வல்லஞ்சேரி, ஆதனூர், மாடம்பாக்கம் போன்ற பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து உபரி நீர் கலக்கும். இதற்காக ரூ. 20 லட்சத்தில் கால்வாய் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. மழையை சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.