திருமலை: ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க வலியுறுத்தி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவுக்கு அமராவதியை மட்டுமே தலைநகரமாக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்நிலையில், வட ஆந்திராவை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழுவினர், விசாகப்பட்டினத்தில் நேற்று கூட்டம் நடத்தினர்.
இதில், ‘3 தலைநகர் அமைத்தால் அரசு நிர்வாக செயல்பாடு அனைவருக்கும் சமமாக இருக்கும். எனவே, விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக அறிவிக்க வேண்டும்,’ என கூறிய ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் சோடவரம் எம்எல்ஏ கரணம் தர்மஸ்ரீ, முன்னாள் அமைச்சர் அவந்தி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா அறிவித்து, ராஜினாமா கடிதம் வழங்கினார்.