புதுடெல்லி: எருமைகள், பசு மாடு மோதியதால் தொடர்ந்து 2 நாட்களாக சேதமடைந்த நிலையில், நேற்று சக்கரங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் வந்தே பாரத் ரயில் பயணிகள் வேறு ரயிலுக்கு மாற்றப்பட்டனர். குஜராத்தில் கடந்த வியாழன்று காலை வந்தே பாரத் ரயில் பாட்வா-மணிநகர் இடையே வந்து கொண்டிருந்தபோது திடீரென எருமைகள் தண்டவாளத்தில் கூட்டமாக புகுந்தன. இதனால், அவற்றின் மீது ரயில் மோதியதில் முன்பகுதி சேதம் அடைந்தது.
இந்த முகப்பு பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டது என்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் அது மாற்றப்பட்டு, வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது.
ஆனால், மறுநாளே காந்திநகர்-மும்பை இடையே ரயில் வந்தபோது பசு மாடு குறுக்கே வந்தது. அதன் மீது மோதியதால், ரயிலின் முன்பகுதி மீண்டும் சேதம் அடைந்தது. தொடர்ந்து 2 நாட்களாக விபத்தில் சிக்கிய நிலையில் நேற்றும், வந்தே பாரத் ரயிலின் சக்கரம் நடுவழியில் பழுதடைந்தது. டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற வந்தே பாரத் ரயில், தான்கவுர் – வயர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது, அதன் சக்கரத்தில் ஒன்று சுழலாமல் இருப்பதை ஊழியர் ஒருவர் கண்டறிந்தார். உடனே, வயர் ரயில் நிலையத்துக்கு அவர் தகவல் கொடுத்தார்.
உடனே, ரயிலை நிறுத்துவற்காக மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால், வந்தே பாரத் ரயிலும், அதற்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயிலும் நடுவழியில் நின்றன. பின்னர், வந்தே பாரத் ரயில் 20 கிமீ வேகத்தில் பாதுகாப்பாக இயக்கப்பட்டு, குர்ஜா ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், டெல்லியில் இருந்து வந்த சதாப்தி ரயில் மூலம், இதன் பயணிகள் மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். வந்தே பாரத் ரயிலில் இவ்வாறு தொடர்ந்து கோளாறுகள், விபத்துகளில் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.