சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை , மற்றும் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள், நீர்வழிக் கால்வாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாருதல் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று (அக்.9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் இதில் ராஜமன்னார் சாலை, ரயில்வே பார்டர் சாலை, பசுல்லா சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை தொட்டி மற்றும் தண்ணீரை வெளியேற்றும் மின் மோட்டார்கள் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெடுஞ்சாலை துறையின் சார்பில் அடையாறு முதல் அண்ணா பிரதான சாலை வரை, கொளத்தூர் ஏரியிலிருந்து உபரநீர் தணிகாசலம் கால்வாயில் சென்று சேர்க்கும் பணி, நீர்வளத் துறையின் சார்பில் அரும்பாக்கம் 100 அடி சாலை அருகே விருகம்பாக்கம் கால்வாய், மணலி ஆமுல்லைவாயல் பகுதியில் புழல் உபரி நீர் கால்வாய், வெள்ளிவாயில், கன்னியம்மன் கோயில் பகுதி, மகாலட்சுமி நகர், வடிவுடையம்மன் நகர் போன்ற சுற்று வட்டார பகுதிகளில் கொசஸ்த்தலை ஆற்றின் கரைகளை பலப்படுத்தி சீர் செய்யும் பணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சிவசாமி சாலை சந்திப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பணிகளின் காரணமாக ரூபாய் 42 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மின்வாரிய புதைவட கம்பிகளை மாற்றி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.