புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் இருந்து மீட்க்கப்பட்ட சுமார் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். தேசிய மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் வால்மீகி மந்திர் அருகே உள்ள ஜிபி சாலையில் அமைந்திருந்த வீடு ஒன்று தான் இடிந்து விழுந்துள்ளது. அந்த வீட்டில் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. இன்று அவர்கள் வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்திருந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு அன்று சுமார் 7.30 மணியளவில் டெல்லி தீயணைப்பு துறையினருக்கு இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வீரர்கள் விரைந்துள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக பின்னர் தேசிய மீட்பு படையினர் வந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அருகே உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
“விபத்து நடைபெற்ற கட்டிடம் இரண்டு மாடிகளை கொண்டுள்ளது. அதுவும் அது சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. நிறைய பேர் காயம் பட்டிருக்கலாம். இதுவரை 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்பு பணிகள் நடந்து வருகிறது” என டெல்லி மத்திய மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் ஸ்வேதா சவுகான் தெரிவித்துள்ளார்.