ஆமதாபாத்,
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான கால்பந்து போட்டியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி, அசாமை எதிர்கொண்டது.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழகம் 5-1 என்ற கோல் கணக்கில் அசாமை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
தமிழக அணியில் சந்தியா 4 கோலும், மாளவிகா ஒரு கோலும் அடித்தனர். தேசிய விளையாட்டில் பெண்கள் கால்பந்தில் தமிழக அணி பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதன் இறுதிப்போட்டியில் மணிப்பூர் 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
வழக்கமான டென்னிசில் பயன்படுத்தப்படும் கடினமான மஞ்சள் நிற பந்துக்கு பதிலாக இலகுவான ரப்பர் பந்து பயன்படுத்தப்படும் சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழகத்திற்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. இதன் ஒற்றையரில் வேலூர் வீராங்கனையான ராகஸ்ரீ மனோகர் பாபு 4-2, 4-2, 4-1, 4-0 என்ற நேர் செட் கணக்கில் மத்தியபிரதேசத்தின் ஆத்யா திவாரியை தோற்கடித்து மகுடம் சூடினார். 17 வயதான ராகஸ்ரீ பிளஸ்-2 மாணவி ஆவார்.
மல்லர் கம்பத்தில்…
அறிமுக போட்டிகளில் ஒன்றான மல்லர்கம்பத்தில் தமிழகத்தின் ஹேமச்சந்திரன் பார்வையாளர்களை மெய்சிலிரிக்க வைத்தார். இதன் ‘ஹேங்கிங்’ தனிநபர் பிரிவில் கம்பத்தில் அந்தரத்தில் தொங்கியபடி ஏறி உடலை வில்லாக வளைத்து சாகசங்களை நிகழ்த்திய அவர் 8.90 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். 19 வயதான ஹேமச்சந்திரன் விழுப்புரம் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மல்லர்கம்பத்தில் போல் பிரிவில் குஜராத்தை சேர்ந்த 10 வயதான ஷர்யாஜித் காரே வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த தேசிய விளையாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் தான் குறைந்த வயதில் பதக்கத்தை கழுத்தில் ஏந்தியவர் ஆவார்.
கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ‘ஏ’ குரூப்பில் அங்கம் வகித்த தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 25-22, 27-25, 25-19 என்ற நேர் செட்டில் குஜராத்தை தோற்கடித்து 3-வது வெற்றியை ருசித்ததுடன் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் தமிழகம்-அரியானா, கேரளா- குஜராத் அணிகள் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் தமிழக அணி தனது கடைசி லீக்கில் 17-25, 24-26, 21-25 என்ற நேர் செட்டில் மேற்கு வங்காளத்திடம் தோற்று அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தது.
நாளையுடன் தேசிய விளையாட்டு நிறைவடைய உள்ள நிலையில் சர்வீசஸ் (53 தங்கம் உள்பட 115 பதக்கம்) தொடர்ந்து பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. மராட்டியம் 34 தங்கம் உள்பட 124 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 24 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் என்று 70 பதக்கங்களுடன் 5-வது இடம் வகிக்கிறது.