மதுரை: மக்களின் மத உணர்வுகளை வியாபாரமாக்க வேண்டாம். கோயிலின் பெயரில் தனிநபர் நடத்தும் இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோயிலின் பெயரில் தனிநபர் நடத்தும்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மார்கண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு என்பது நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் 60-ம் கல்யாணம், மற்றும் பல வைபவங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற முறையில் நடைபெறும்.
இந்நிலையில், இந்த கோயிலின் சிறப்பு பூஜைக்கு வரக்கூடிய நபர்களை மோசடி செய்யும் விதமாக இந்த கோயிலின் பெயரில் தனியார் சிலர் இணையதளங்களை தொடங்கி தற்போது வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்த கோயிலில் நடைபெறக்கூடிய 60-ம் கல்யாணங்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக ரூ.2,000 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. இதற்கு உரிய ரசீதும் வழங்கப்படுகிறது.
ஆனால் பல்வேறு இணையதளங்கள் கோயிலின் பெயரில் போலியாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளங்கள் ரூ.2,000 முதல் ரூ. 4 லட்சம் வரையில் 60-ம் கல்யாணம் மற்றும் அபிஷேகங்களுக்கு வசூலிக்கப்படுகிறது. இதுபோல் பல கோடி ரூபாய்கள் ஏமாற்றப்பட்டு கோயிலின் பெயரால் மோசடி செய்யப்பட்டுவருகிறது. எனவே இந்த இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமட்டுமின்றி இதுபோன்ற போலியான இணையதளங்களை உடனடியாக முடக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணையின் போது இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள் பல்வேறு வழிகாட்டுதல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.
கோயிலின் பெயரில் தனியார் இணையதளம் தொடங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இணையதளத்தை உடனடியாக முடக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் மத உணர்வுகளை வியாபாரமாக்க வேண்டாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இணையதளம் முடக்கம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து கோயிலின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.