Plastic Ban in Tamil Nadu: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பண்டிகையை தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்ததை அடுத்து, ஆய்வு மேற்கொண்டனர்.
மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன்ஹால், ஒப்பணைக்காரர் வீதி, தாமஸ் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சுமார் 500 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பைகள் அரசால் தடை செய்யப்பட்ட நானோ வகையான பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போது சிலர் பிளாஸ்டிக் பைகளை மறைக்க முயற்சி செய்துள்ளனர். இந்த சோதனையின் போது சுமார் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திடீர் சோதனைக் குறித்து அதிகாரிகள் கூறும்போது, “ஏற்கனவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அளிக்க முடியாத பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என மாநகராட்சியில் உள்ள கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எச்சரிக்கையை மீறி சில கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் கடைகளில் இருந்து பைகள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதங்களும் விதிக்கப்படுகிறது. மீண்டும் இங்கு பிளாஸ்டிக் பைகள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.