வடகிழக்கு பருவமழை: மின்வாரிய பணிகள் நிலவரம்.. செந்தில்பாலாஜி விளக்கம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. மின்வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது: பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பருவமழையில் பாதிப்பு ஏற்பட்டால் மாற்றியமைப்பதற்காக 14,442 மின்மாற்றிகள், 1,50,992 மின்கம்பங்கள், 12 ஆயிரம் கி.மீ மின் கம்பிகள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து மண்டலங்களிலும் தேவையான பொருட்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும், தமிழகம் முழுவதும் சேதமடைந்த 39,616 மின்கம்பங்கள் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் தரையில் உள்ள மின் பெட்டிகள் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை மழைநீர் வடிகால் பணிகள் தொடர்புடைய பணிகள் ஒருங்கிணைந்து நடைபெற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, சென்னையில் 5 கோட்டங்களில் புதைவட கம்பிகள் பதிக்கும் பணிகள் 2 மாதத்தில் முடியும். அதனை தொடர்ந்து அடுத்த 2 மாதத்தில் சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் பணிகள் நடைபெறும். மின்னகத்தில் மழை காலங்களில் அதிக அழைப்புகள் வரும் என்பதால் கூடுதலாக 75 தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்படுள்ளதாக கூறினார்.

மேலும், அடுத்த வரும் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியத்தின் சொந்த நிறுவுதலில் 50 விழுக்காடு மின் உறுபத்தி அதிகரிக்கும். கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.