
தீபாவளி தினத்தில் மோதும் மோகன்லால் – நிவின்பாலி படங்கள்
கேரளாவை பொறுத்தவரை ஓணம், சித்திரை விஷு, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளில் தான் மிகப்பெரிய படங்கள் வெளியாவது வழக்கம். தீபாவளியை பொறுத்தவரை அங்கே பெரும்பாலும் பண்டிகை கொண்டாட்டமாக படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்ததில்லை. தமிழில் வெளியாகும் படங்களே மலையாள திரையுலகில் தீபாவளி கொண்டாட்டமாக இதுவரை இருந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21ஆம் தேதி மோகன்லால் நடித்துள்ள மான்ஸ்டர், மற்றும் நிவின்பாலி நடித்துள்ள படவேட்டு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளன.
இதில் மோகன்லால் நடித்துள்ள மான்ஸ்டர் படத்தை புலிமுருகன் பட இயக்குனர் வைசாக் இயக்கியுள்ளார். அந்த படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணா தான் இந்தப் படத்திற்கும் கதை எழுதியுள்ளார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
அதேசமயம் நிவின்பாலி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், தற்போது அறிமுக இயக்குனர் லிஜுகிருஷ்ணா இயக்கத்தில் நிவின்பாலி நடித்துள்ள படவேட்டு படம் வெளியாவதால் இந்தப்படத்திற்கும் ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கின்றது.
சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு படங்களின் டிரைலர்களும் அந்த எதிர்பார்ப்பிற்கு தீனி போடுவதாக அமைந்துள்ளன. இந்த போட்டியில் சிவகார்த்திகேயன் தெலுங்கில் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படமும் கலந்துகொள்ளும் என்று தெரிகிறது.