மதுரை: கொலை வழக்கு விசாரணைக்கு என தனிப்பிரிவை ஏற்படுத்துவது குறித்து டிஜிபி தரப்பில் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சதீஷ் குமார், சங்கர், மற்றொரு சதீஷ்குமார் ஆகியோருக்கு கடந்த 2017ல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 3 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்திருந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட் கிளை 3 பேரையும் விடுதலை செய்தது. மேலும் காவல்துறைக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த வழிகாட்டுதல்களை நிறைவேற்றியது குறித்து அறிக்கையளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கொலை குற்றங்கள் கடுமையானவை. கொலை வழக்கில் போலீசாரின் விசாரணை முறை குறித்து, ஏற்கனவே நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. சட்டம் – ஒழுங்கு போலீசாரே தங்களின் வேலைப்பளுவிற்கு இடையே கொலை குற்றங்களையும் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, கொலை குற்றங்களை விசாரிப்பதற்கென்று தனிப்பிரிவை ஏற்படுத்துவது தொடர்பாக அரசின் நடவடிக்கையை தீவிரமானதாக பார்க்கிறோம். சட்டம் – ஒழுங்கு போலீசாரே கொலை வழக்கை விசாரிப்பதால் தான் தொய்வு ஏற்படுகிறது.
எனவே, கொலை வழக்குகளை மட்டும் விசாரிக்கும் வகையில் அதற்கென தனிப்பிரிவை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. தனிப்பிரிவை உருவாக்குவது தான் சட்டம் – ஒழுங்கு போலீசாருக்கு சுமையை குறைக்கும். இதன் மூலம் தான் கொலை வழக்குகளின் மீதான விசாரணையை திறம்பட மேற்கொள்ள முடியும். எனவே, காவல் துறையில் கொலை வழக்குகளை விசாரிப்பதற்கென்ற தனிப்பிரிவை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கை குறித்த அறிக்கையை, டிஜிபி தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை நவ. 7க்கு தள்ளி வைத்தனர்.