திருவனந்தபுரம்,இளமையாக இருக்கவும், பணக்காரராக வேண்டும் என்ற ஆசையிலும், ‘சைக்கோ’ ஆசாமியின் வலையில் சிக்கி, இரண்டு பெண்களை நரபலி கொடுத்ததுடன், நிர்வாண வழிபாடு நடத்தி கொலை செய்த கேரள தம்பதி, கொலையான பெண்களின் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டுள்ள கிடுகிடுக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
பெண்கள் நரபலி
இங்கு, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் மாந்தரீகத்தை நம்பி, தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது:
இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான முகமது ஷபி, மாந்த்ரீகம் பார்ப்பதாக கூறி பலரை ஏமாற்றியுள்ளார். பாலியல் இச்சைக்கு அடிமையான வராகவும் உள்ளார்.
கேரளாவில், 75 வயது மூதாட்டி உட்பட பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது, பலாத்கார முயற்சி செய்ததது உட்பட இவர் மீது பல வழக்குகள் உள்ளன.
மேலும், மற்றவர்களை துன்புறுத்தி அதைப் பார்த்து ரசிக்கும் சைக்கோவாகவும் உள்ளார்.
ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, 2020ல் தான் ஜாமினில் இவர் வெளி வந்துள்ளார்.
தன் மனைவியின் பெயரிலான சமூக வலைதள பக்கம் வாயிலாக திருவல்லாவைச் சேர்ந்த, ‘மசாஜ் சென்டர்’ நடத்தி வரும் பகவல் சிங், 65 மற்றும் அவருடைய மனைவி லைலா, 59, குறித்து ஷபி அறிந்துள்ளார்.
விரைவில் பணக்காரராக வேண்டும் என்று இவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
பிரச்னைகள் தீரும்
இதையடுத்து, இவர்களுடைய வீட்டுக்குச் சென்று அவர்களிடம் ஷபி பேசியுள்ளார். நரபலி கொடுத்தால் அவர்களுடைய பிரச்னைகள் தீரும்; விரைவில் பணக்காரராகலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதற்கான ஏற்பாட்டை தானே செய்வதாகவும் கூறியுள்ளார். இதன்படி, கொச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்த காலடியைச் சேர்ந்த ரோஸ்லின், 50, என்பவரை அணுகியுள்ளார். ஆபாச படங்களில் நடித்தால் பல லட்சம் ரூபாய் பணம் தருவதாக ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பி ஏமாந்த அந்த பெண்ணை, பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அந்தப் பெண்ணை நிர்வாணமாக்கி, கை, கால்களை கட்டி வைத்துள்ளனர்; அவருடைய மார்பகத்தையும் அறுத்துள்ளனர். அதில் இருந்த ரத்தம் வழிவதை பார்த்து ஷபி மகிழ்ந்துள்ளார்.
பலன் கிடைக்கவில்லை
பிறகு, பகவல் சிங் தம்பதியை நிர்வாணமாக பூஜை செய்யும்படி கூறியுள்ளார். அதன்பிறகு, அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று, உடலை பல துண்டுகளாக்கியுள்ளார்.
எப்போதும் இளமையாக இருக்க, சில உடல் பாகங்களை சமைத்து சாப்பிடும்படியும், அந்த தம்பதிக்கு ஷபி கூறிஉள்ளார். மீதியுள்ள உடல் பாகங்களை வீட்டுக்கு அருகில் புதைத்துஉள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் இந்த சம்பவம் நடந்தது. ஆனால், இதற்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை என்று தம்பதி கூறியுள்ளனர்.
இதையடுத்து மற்றொரு பெண்ணை அழைத்து வருவதாக ஷபி கூறியுள்ளார்.
கொச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த, தமிழகத்தின் தர்மபுரியைச் சேர்ந்த, பத்மா, 50, என்ற பெண்ணை, ஆசை வார்த்தை கூறி பகவல் சிங் வீட்டுக்கு கடந்த மாதம் ஷபி அழைத்து சென்றுள்ளார்.
வேறு யாருக்கு தொடர்பு
அவரையும் நிர்வாணமாக்கி, மார்பகத்தை அறுத்து சித்ரவதை செய்துள்ளனர். நிர்வாண பூஜை செய்த பின், பத்மாவை கொலை செய்து, உடலை வெட்டியுள்ளனர்.
இவருடைய உடலை, 56 துண்டுகளாக்கி, சில பாகங்களை சமைத்து சாப்பிடும்படி தம்பதிக்கு ஷபி கூறியுள்ளார். மீதமுள்ள உடல் பாகங்களை, வீட்டுக்கு அருகில் புதைத்துள்ளனர்.
பத்மா காணாமல் போனது தொடர்பான புகாரை விசாரித்தபோதுதான், அவருடைய மொபைல்போன், ஷபியிடம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், இந்த நரபலி விவகாரம் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, வேறு யாரும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
நரபலி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கேரள தம்பதி, சைக்கோ ஷபி ஆகியோர் கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், நரபலி கொடுத்த பகவல் சிங், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதை கட்சி மறுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்