திருமலை ஏழுமலையான் கோவில் கிரகணத்தால் 12 மணி நேரம் மூடல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருப்பதி :வரும் அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருமலையில் கிரகண காலங்களில், கோவில் நடை சாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், வரும் அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணமும், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணமும் வருவதால், ஏழுமலையான் கோவில் இந்த நாட்களில், 12 மணி நேரம் மூடப்படும்.

latest tamil news


அக்டோபர் 25ம் தேதி மாலை 5:11 மணி முதல் 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால், ஏழுமலையான் கோவில் காலை 8:11 மணி முதல் இரவு 7:30 மணி வரை மூடப்படும்.வளாகத்தை சுற்றி சடங்குகள் செய்த பின், மீண்டும் கோவில் கதவுகள் திறக்கப்படும்.

இதேபோல், நவம்பர் 8-ம் தேதி மதியம் 2:39 மணி முதல் மாலை 6:19 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்நாளில், கோவில் காலை 8:40 மணிக்கு மூடப்பட்டு, இரவு 7:20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.இந்த இரண்டு நாட்களில், வி.ஐ.பி., ‘பிரேக்’ தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த இரண்டு நாட்களிலும், சர்வ தரிசன யாத்ரீகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொதுவாக, கிரகண நாட்களில் அன்னதான கூடமும் மூடப்பட்டிருக்கும். இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.