புதுடெல்லி: கோவாவில் கடற்படைக்கு சொந்தமான மிக்29கே போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். கடற்படைக்கு சொந்தமான மிக்29கே போர் விமானம் கோவா கடற்கரை பகுதியில் நேற்று காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. விமான தளத்துக்கு விமானம் திரும்பிக்கொண்டு இருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி துரிதமாக செயல்பட்டு விமானத்தில் இருந்து வெளியேறியதால் உயிர் தப்பினார். தகவல் அறிந்த கடற்படையினர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மீட்பு குழுவினர் மூலமாக விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான விபத்துக்கான காரணங்களை கண்டறிய, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.