புதுடில்லி : அதானி’ குழுமம், முழு அளவிலான தொலைதொடர்பு சேவைக்கான உரிமத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது.அதானி குழுமத்தின் அங்கமான, ‘அதானி டேட்டா நெட்வொர்க்’ நிறுவனத்துக்கு, முழு அளவிலான தொலைதொடர்பு சேவைகளுக்கான ஒருங்கிணைந்த உரிமத்தை, மத்திய அரசு வழங்கி உள்ளது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அண்மையில் நடைபெற்ற ‘5ஜி’ அலைக்கற்றைக்கான ஏலத்தின் போது, ‘ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா’ ஆகிய நிறுவனங்கள், அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்றன.
ஆனால், முதன் முறையாக இந்த துறையில் இறங்கிய அதானி நிறுவனம், தனியார் நெட்வொர்க் சேவைக்காக மட்டும் 5ஜி ஏலத்தில் இறங்கியது.
இந்நிலையில், தற்போது, அதானி டேட்டா நெட்வொர்க் நிறுவனத்துக்கு, முழு அளவிலான தொலைதொடர்பு சேவைகளுக்கான ஒருங்கிணைந்த உரிமத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது.
இருப்பினும், அதானி குழுமம் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிடவில்லை. மேலும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக இறங்க இருப்பதாகவும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
அதுமட்டுமின்றி; 5ஜி ஏலம் துவங்கிய சமயத்தில், தொலைதொடர்பு சேவைக்கான சில்லரை வணிகத்தை வழங்க விரும்பவில்லை என்றும்; அதன் தனிப்பட்ட 5ஜி நெட்வொர்க்கை அமைப்பதற்காகவே, ஏலத்தில் பங்கேற்பதாகவும் அதானி குழுமம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தற்போது முழு அளவிலான உரிமையை நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து, அடுத்த கட்டமாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக இறங்க உள்ளதா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இதற்கான பதிலை அதானி குழுமம் தான் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement