பெங்களூரு: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்துவர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கர்நாடகா மாநிலம் உடுப்பி பியுசி கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினர். கடைசியாக இந்த வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்றது. நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. இந்த வழக்கில் இரு தரப்பிலும் நீண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
கர்நாடக உயர் நீதிமன்றம் தரப்பில், இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது என்பது அடிப்படை மத நடைமுறை இல்லை என்றும் அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத சுதந்திரம் சில நியாயமான தடைகளுக்கு உட்பட்டதே என்றும் வாதிடப்பட்டது. மேலும் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, நிர்ணயிக்கப்பட்ட சீருடை உள்ள அரசுக் கல்லூரிகளில் ஹிஜாப் அணியக்கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அரசியல் சாசன ரீதியாக அனுமதிக்கத்தக்கதே என்றும் வாதிடப்பட்டது.
இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அவர்கள் தரப்பில், ஹிஜாப் அணிவது அரசியல் சாசன சட்டப்பிரிவு 19(1)(a)ன்படி தங்களின் உரிமை என்று வாதிடப்பட்டது. அதேபோல் அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 25ன் படி ஹிஜாப் தனிநபர் உரிமை சார்ந்தது என்றும் அதனால் அதன்மீது கர்நாடக உயர் நீதிமன்றம் அத்தியாவசிய மத நடைமுறைகள் பரீட்சையை பிரயோகப்படுத்தியிருக்க வேண்டாம் என்றும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்தது. புனித குரானின்படி ஹிஜாப் அணியாதவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பது புனித நூலை கற்றறிந்தோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஈரான் போராட்டத்தை சுட்டிக்காட்டிய கர்நாடகா: இந்நிலையில், இந்த வழக்கில் கடைசியாக நடந்த வாதத்தில் கர்நாடகா அரசுத் தரப்பில் ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட பெண்கள் ஹிஜாபை எதிர்த்துப் போராடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாபுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் இயல்பானவை அல்ல அதன் பின்னர் மிகப்பெரிய சதி நடக்கிறது என்று கூறியது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.