மணமகனே மணமகனே வா வா..உன் வலது காலை எடுத்து வைத்து வா வா..: ஆமீர்கானின் அடுத்த சர்ச்சை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனது படங்கள் மூலமாகவோ அல்லது மேடைகளில் பேசும் கருத்துக்கள் மூலமாகவோ சில விஷயங்களை பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

அதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியான அவரது லால் சிங் சத்தா என்கிற படத்தை கூட புறக்கணிக்க வேண்டும் என அந்த சமயத்தில் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய பிரசாரம் நடந்தது. நிலைமை இப்படி இருக்க, தற்போது நிதி நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் நடித்துள்ள ஆமீர்கான், அதில் பேசியுள்ள வசனம் சர்ச்சையை கிளப்பி அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.

ஆமீர்கான் மற்றும் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ள அந்த விளம்பரப் படத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு மணமகன் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது மணமகள் ஹிந்து மத சம்பிரதாயங்களின்படி அந்த வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைக்க வேண்டும்.

இந்த சமயத்தில் ஆமீர்கான் குறுக்கிட்டு, ‛எதற்காக காலங்காலமாக இருக்கும் சில நடைமுறைகளை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் தான் வங்கி நடைமுறைகள் ஒவ்வொன்றையும் நாங்கள் கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது,’ என்று கூறி, மணமகளுக்குப் பதில் மணமகனான ஆமீர்கான் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைகிறார்.

latest tamil news

இது ஹிந்துமத உணர்வாளர்கள் மனதை புண்படுத்துவதாகவும் அவர்களது பாரம்பரிய வழக்கங்களை கிண்டல் செய்வதாகவும் அமைந்துள்ளதாக எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. பலரும் ஆமீர்கானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆமீர்கானையும், அந்நிதி நிறுவனத்தையும் புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஸ்டாக்குகள் டிரெண்டாகின.

latest tamil news

இது தொடர்பாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது: இந்த விளம்பர படத்தில் ஹிந்து மரபுகளை தவறாக விமர்சித்து உள்ளதாக எனக்கு புகார் வந்துள்ளது. விளம்பரத்தைப் பார்க்கும்போது அது எதேச்சையாக நடந்ததாக கருத முடியவில்லை.

ஆமீர்கான் போன்றவர்கள் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதற்கு முன்பாக ஹிந்துமத மரபுகளையும் பாரம்பரியத்தையும் நன்கு தெரிந்துகொண்டு அதன் பிறகு நடிக்க வேண்டும். இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக ஆமீர்கான், கியாரா அத்வானி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆகியவை மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.