
2022-ம் ஆண்டுக்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர்கள் விருதை அறிவித்துள்ளது, லண்டனில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் (Natural History Museum). அவ்விருதை தட்டிச் சென்றவர்களின் பட்டியல் இதோ…

காரின் ஐக்னெர் என்ற அமெரிக்கப் பெண் தேனீக்கள் பந்து போல ஒன்றாய் இருப்பதைக் கண்டு வியந்து எடுத்த புகைப்படத்திற்காக, சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான விருதை வென்றுள்ளார்.

இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கான விருதை, 16 வயதான தாய்லாந்தைச் சேர்ந்த கட்டன்யூ வுட்டிசைசைடனகோர்ன் வென்றுள்ளார். பிரைட் திமிங்கலம் உணவை வடிகட்ட, அதன் வாயில் உள்ள பலீன் பிளேட்களை பயன்படுத்தும். இதன் நெருக்கமான காட்சியைப் படம்பிடித்துள்ளார் அவர்.

சார்கோல் மாஃபியாவால் தன்னுடைய குழு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து இரண்டு மாத குழந்தையாக மீட்கப்பட்ட கொரில்லா (நடகாசி), அதன் மீட்பாளர் ஆண்ட்ரே பாயுமாவின் மீது படுத்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்காக, வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான பிரிவு ஒன்றில் விருதை வென்றிருக்கார், ப்ரெண்ட் ஸ்டிர்டன்.

பொலிவியாவின் மிகப்பெரிய லித்தியம் சுரங்கம், ஃபிளமிங்கோக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதை எடுத்துரைக்க, உலகின் மிகப்பெரிய உப்பு தொட்டியான Salar de Uyuni – ல் ஃபிளமிங்கோக்கள் இருப்பதைப் படம்பிடித்துக் காட்டியதற்காக, ஜப்பானியப் புகைப்படக் கலைஞர் ஜூன்ஜி தகாசாகோ விருதைப் பெற்றுள்ளார்.

குவாத்தமாலா, அமாடிட்லான் ஏரி ஓரத்தில் காடுகளுக்கும், மாசுபாடுகளால் ஏற்பட்ட பாசிகளின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய டிரோன் மூலம் படம் எடுத்துள்ளார், டேனியல் நூனெஸ். `தி பிக்கர் பிக்சர்’ பிரிவில் (The Bigger Picture) விருதை வென்றுள்ளார்.

கடலுக்கடியில் நட்சத்திர மீனைச் சுற்றி, மின்னல் இருப்பதை போலத் தோன்றும் இந்தப் புகைப்படத்தில், உண்மையில் அது தன்னுடைய உடலை அசைத்து முட்டை மற்றும் விந்துகளைச் சேர்த்து கருவுறும் அபூர்வ காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த டோனி வூவிற்கு சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது `அண்டர்வாட்டர்’ பிரிவில், இந்தப் புகைப்படத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தி சாய்கையில் ஆயிரக்கணக்கான வௌவால்கள், பூச்சிகளைத் தேடி குகையை விட்டு வெளியேறும். அச்சமயத்தில் எலிப்பாம்புகள் குகைகளின் சுவர்களில் தொங்கியபடி, வௌவால்களை வேட்டையாடும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. `இருவாழ்விகள் மற்றும் ஊர்வன’ பிரிவில் ஃபெர்னாண்டோ கான்ஸ்டான்டினோ மார்டினெஸ் பெல்மர் விருதைப் பெற்றுள்ளார்.

`நகர்ப்புற வனவிலங்கு’ பிரிவில், டிமிட்ரி கோக் வென்றுள்ளார்… கொலியுச்சின் தீவில், கைவிடப்பட்ட கட்டடங்களில் துருவக் கரடிகள் இருக்கும் புகைப்படத்துக்காக.