ராமநாதபுரம்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ராமநாதபுரம் வீட்டிற்கு போராட்டம் நடத்த வந்த நடிகை சாந்தினியை, அமைச்சரின் உறவினர்கள் விரட்டியதால் கார் அமர்ந்தாவறு இருந்துவிட்டு திரும்பிச் சென்றார்.
கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த எம்.மணிகண்டன், தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, பின்னர் கருக்கலைப்பும் செய்யச் சொல்லிவிட்டு, தன்னைவிட்டு பிரிந்துவிட்டதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட துணை நடிகை சாந்தினி புகார் அளித்தார். அதனடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் போலீஸார், மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். அதன்பின் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் மணிகண்டனும், சாந்தினியும் சமரசம் செய்து கொண்டனர். அதனடிப்படையில் மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் நடிகை சாந்தினி நேற்று ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த அவரது உறவினர்கள் அவரை வீட்டிற்குள் விடாமல் திருப்பி அனுப்பினர். அதனால் அவர் மணிகண்டன் வீட்டின் அருகில் நீண்ட நேரம் காரில் அமர்ந்து இருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “என்னுடைய மற்றும் அவரது நலன் கருதி 4 மாதங்களுக்கு முன்பு வழக்கை திரும்பப் பெற்றேன். அப்போது என்னால் தான் உன் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் உன்னை பார்த்துக் கொள்கிறேன் என மணிகண்டன் கூறினார். ஆனால் வழக்கை திரும்பப் பெற்றதும் கடந்த 3 மாதங்களாக என்னிடம் பேசுவதில்லை, எங்கோ தலைமறைவாகிவிட்டார். அவரை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் மதுரைக்குச் சென்றேன். ஓரிடத்தில் என்னை பார்த்ததும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் அவரது வீட்டிற்குச் சென்றேன். வீட்டிற்குள் இருந்து கொண்டு என்னை சந்திக்கவில்லை. அதன்பின் போலீஸாரும், அதிகாரிகளும் வந்து சமரசம் செய்தனர். இந்நிலையில் அவர் ராமநாதபுரம் வந்திருப்பதாக கேள்விபட்டு இங்கு வந்தேன். ஆனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் என்னை விரட்டியடிக்கின்றனர். அவர் என்னிடம் பேச வேண்டும். எனக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். அதுவரை இங்கிருந்து செல்லமாட்டேன்” என்றார்.