சேலம்: சேலத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சேலம் ஐந்து ரோடு, பகுதியில் தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் டிப்ளமோ, செவிலியர், ஆசிரியர் பயிற்சி அளிப்பதற்கு முறையான அனுமதி பெறாமல் இயங்குவதாகப் புகார் வந்தது. அதன்பேரில் காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள், மருத்துவ அலுவலர்கள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி நிறுவன உரிமையாளர் விக்டோரியாவிடம் நேற்று வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து பயிற்சி நிறுவனம் தொடர்பான பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டதில், பயிற்சி நிறுவனம் முறையான அனுமதியில்லாமல் நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மையத்தில் பயிலும் மாணவிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து வந்ததும், அதற்கான ஊக்கத் தொகையை மாணவிகளுக்கு வழங்காமல் நிறுவன உரிமையாளர்களே எடுத்து கொள்வதும் தெரியவந்தது. அதில், பயிற்சி பெறுவதற்கு அனுமதி கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்த நிலையில், பயிற்சியில் சேரும்போது ரூ.5,000 வசூலித்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
விடுதி வசதியும் முறையாக அளிக்கப்படாமல் தரமற்ற உணவுகளை அளித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பயிற்சி மையத்தில் இருந்த 18 மாணவிகளில் 13 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 3 மாணவிகள் தற்காலிக ஏற்பாடாக குழந்தைகள் நல குழு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து முறையான அனுமதியில்லாமல் இயங்கி வந்த பயிற்சி மையத்துக்கு சேலம் மேற்கு வட்டாட்சியர் தமிழரசி தலைமையிலான அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.