24ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து இருக்கும் பா.ஜனதாவுக்கு இப்போது வர இருக்கும் தேர்தல் கொஞ்சம் தூக்கத்தை கெடுத்து விட்டது. காங்கிரஸ் மட்டும் தானே என்று அசால்ட்டாக எதிர்கொண்ட அவர்களுக்கு ஆம்ஆத்மியின் திடீர் வியூகம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2023 பிப்ரவரி 18ம் தேதி வரை குஜராத் சட்டசபை ஆயுட்காலம் உள்ளது. வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்த ஆணையம் தயாரானது. ஆனால் இமாச்சலபிரதேசத்திற்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவித்து விட்டு குஜராத் பற்றி வாய் திறக்கவில்லை தேர்தல் கமிஷனர்கள். காரணம் ஆம்ஆத்மியின் அசால்ட் அதிரடி என்கிறது டெல்லி வட்டாரம். டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சியை ஆட்சியில் அமர வைத்த கையோடு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் வியூகத்தை வகுத்து களம் இறங்கி விட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். குஜராத் ஆம்ஆத்மி தேர்தல் பொறுப்பாளர் டெல்லி துணைமுதல்வர் சிசோடியா மற்றும் ஆம்ஆத்மி எம்பி ராகவ் சதா. இமாச்சலபிரதேச பொறுப்பாளர் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்.
அதகளப்படுத்திவிட்டார்கள் தேர்தல் பொறுப்பாளர்கள். பா.ஜ, காங்கிரசில் அதிருப்தியில் இருந்த முன்னணி நிர்வாகிகள், ஒவ்வொரு தாலுகா மற்றும் பஞ்சாயத்து வாரியாக உள்ள பெரும் பணக்காரர்களை கணக்கெடுத்து ஆம்ஆத்மி வசம் சேர்த்து விட்டார்கள். தேர்தல் களத்தில் எப்போதும் முந்தி நிற்கும் பா.ஜவுக்கு இது ஒருவகையில் அதிா்ச்சி வைத்தியமாகி விட்டது. போதாக்குறைக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு கெஜ்ரிவால் வாரம் இருமுறை என்ற அளவிற்கு அடிக்கடி விஜயம் செய்வதும், அங்கு மூவர்ண கொடி ஏந்தி யாத்திரை நடத்துவதும் பெரும் தலைவலியாகி விட்டது. கடந்த ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மியின் குறிப்பிடத்தக்க வாக்குவங்கியும் கலக்கத்திற்கு முக்கிய காரணம். தேர்தல் நடந்த 7 மாநகராட்சிகளையும் பா.ஜ கைப்பற்றிவிட்டது. 74 நகராட்சி, 31 மாவட்ட பஞ்சாயத்து, 196 டவுன் பஞ்சாயத்து பா.ஜ வசம். காங்கிரஸ் கட்சிக்கு 1 நகராட்சி, 18 டவுன் பஞ்சாயத்து மட்டுமே கிடைத்தது. ஆம்ஆத்மிக்கு எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் சூரத் மாநகராட்சியில் 28.47 சதவீதம், அகமதாபாத் 6.99, வதோதராவில் 2.81, பாவ்நகரில் 6.99, ஜாம்நகரில் 8.41, ராஜ்கோட்டில் 17.4, காந்திநகரில் 21.77 சதவீதம் வாக்குகளை பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. சூரத் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 120 இடங்களில் பா.ஜ 93 வார்டுகளை வென்றது. ஆம்ஆத்மிக்கு 27 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு எதுவும் இல்லை.காந்திநகர் மாநகராட்சியிலும் மொத்தம் உள்ள 44 இடங்களில் ஒரு வார்டை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றியது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பா.ஜவுக்கு 53.08 சதவீதம், காங்கிரசுக்கு 26.9 சதவீதம் வாக்குகள் கிடைத்து இருந்தன. ஆம்ஆத்மி புதுமுகமாக அறிமுகமாகி முதல் தேர்தலிலேயே 13.28 சதவீதம் வாக்குகளை கைப்பற்றியது. இது குஜராத் வாக்காளர்களை ஆம்ஆத்மி பக்கம் திரும்ப வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக சூரத் வைர வியாபாரிகள், வர்த்தகர்கள் அதிகம் பேர் ஆம்ஆத்மியில் இணைந்தனர்.
திடீரென ஆம்ஆத்மி பக்கம் குஜராத் வாக்காளர்கள் திரும்பி இருப்பதும், கெஜ்ரிவால் நடத்தி வரும் பேரணிக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதும் பா.ஜவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை முடுக்கி வருகிறார் கெஜ்ரிவால். ஆட்சிக்கு எதிரான அலையை தங்கள் பக்கம் திருப்ப அனைத்து வியூகங்களையும் ஆம்ஆத்மி வகுத்து வருவது பிரதமர் மோடிக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. கெஜ்ரிவால் போல் அவரும் இப்போது வாரம் 2 முறை குஜராத்தில் முகாமிட்டு பிரசாரத்தை வேகப்படுத்தி வருகிறார். ஆம்ஆத்மியின் சரவெடிகளை புஸ்வாணமாக்க அவர்களை நகர்புற நக்சல்கள் என்று கொஞ்சம் காட்டமாக விமர்சனம் வைத்தார். இதற்கெல்லாம் கொஞ்சமும் கவலைப்படவில்லை கெஜ்ரிவால். இன்னும் 2 மாதங்களில் குஜராத்தில் ஆம்ஆத்மி ஆட்சி தான். எனவே போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என்று கெத்து காட்டுகிறார்.