மகாவலி மற்றும் களனி மின் உற்பத்தி பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இடம்பெற்றுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இங்கு மில்லிமீட்டர் 50 க்கும் 60 க்கும் இடைப்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35 க்கும் 36 வீதத்திற்கும் இடைப்பட்டதாக காணப்பட்டது. இதன் காரணமாக இதன் வான் கதவுகள் திறக்க வேண்டியதில்லை என்று பணிப்பாளர் டி அபே சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 3 ஆம் நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, தொடங்கொட, மத்துகம, மில்லனிய, பண்டாரகம மற்றும் ஹொரண பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவவிற்கும் 2 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக மற்றும் பாதுக்க, காலி மாவட்டத்தில் பத்தேகம, களுத்துறை மாவட்டத்தில் மதுராவல, பேருவளை, பாணந்துறை மற்றும் களுத்துறை ஆகிய இடங்களுக்கு நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை, தெஹியோவிற்ற, தெரணியகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத, பெல்மடுல்ல, குருவிட்ட, நிவித்திகல, எஹலியகொட, கலவான, அயகம, கிரியெல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களிலும் முதலாம் நிலை (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக களுகங்கை, நில்லகந்த மற்றும் அத்தனகல ஓயா, துனமலே பிரதேசங்கள் வெள்ள அனர்த்த நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த பிரதேசத்தில் தொடர்ந்தும் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது ஏனைய நதிகளின் நீர்மட்டம் பொதுவான அளவில் உள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலய காலப்பகுதியில் மத்துகமவில் ஆகக்கூடிய மழை பதிவாகியுள்ளது. இது 264 மில்லிமீட்டர்.