பீஜிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் தவிர மற்ற அனைவரும் மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், ஒரு கட்சி ஆட்சி அமைந்துள்ளது.
ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளின்படி, ஒருவர் தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டு என, 10 ஆண்டுகள் மட்டுமே அதிபராக இருக்க முடியும்.
வலுவானவர்
கடந்த 2012ல் அதிபராக பதவியேற்ற ஷீ ஜிங்பிங், கட்சியில் மிகவும் வலுவானவராக உருவெடுத்துள்ளார்.
கட்சித் தலைவர், நாட்டின் அதிபர், படைகளின் தலைவர் என, மூன்று பதவிகளும் அவரிடமே உள்ளன.தொடர்ந்து, 10 ஆண்டாக அதிபராக உள்ள அவருடைய பதவிக் காலம் விரைவில் முடிவுக்கு வரஉள்ளது.
இந்நிலையில், தன் வாழ்நாள் முழுதும் அதிபராக தொடரும் வகையில், சட்டத் திருத்தங்களை ஜிங்பிங் செய்துள்ளார். பார்லிமென்டில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, கட்சி விதிகளிலும் இதற்கான மாற்றம் செய்யப்பட உள்ளது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கட்சியின் மாநாடு நடத்தப்படும். இதன்படி, கட்சியின் 20வது மாநாடு இன்று துவங்க உள்ளது. இதில், ஜிங்பிங் அதிபராக தொடரும் வகையிலான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
ஜிங்பிங்கால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 2,295 கட்சி பிரதிநிதிகள், இந்த தீர்மானத்துக்கான ஓட்டெடுப்பில் ஓட்டளிக்க உள்ளனர்.இதற்கிடையே, கட்சியில் ஜிங்பிங்கைத் தவிர மற்ற மூத்த தலைவர்கள் அனைவரும் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
குழப்பம்
அதுபோல, வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ உட்பட பல முக்கிய அமைச்சர்களும் மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்