புதுடில்லி, :புதுடில்லியில், சட்டவிரோதமாக ஆயுதம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டு, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, சட்டவிரோத ஆயுத தயாரிப்பு கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, உத்தர பிரதேசத்தின் எடாவா பகுதியைச் சேர்ந்த ஜனக் சிங் என்பவர் சிக்கினார்.
இவரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து, சட்டவிரோத ஆயுதக் கும்பலான, மத்தியபிரதேசத்தின் பிண்ட் பகுதியைச் சேர்ந்த ராஜிவ் ஓஜா, லட்சுமி நாராயண் மற்றும் டில்லி ஜாப்ராபாதைச் சேர்ந்த ரஷித் ஆகியோர் பிடிபட்டனர்.
இது குறித்து, போலீஸ் சிறப்பு கமிஷனர் ரவீந்திர யாதவ் நேற்று தெரிவித்ததாவது:
லாரி டிரைவரான ஜனக் சிங், மத்திய பிரதேசத்தில் இருந்து டில்லி மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு ஆயுதங்களை கடத்தி வந்துள்ளார். இவரிடமிருந்து நான்கு கைத்துப்பாக்கிகள், ௧௬ துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயண் என்பவரிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்ததாக கூறினார்.
லட்சுமி நாராயணை பிடித்து விசாரித்ததில், அவர் ராஜிவ் ஓஜா என்பவரிடம் கொள்முதல் செய்ததாக கூறினார்.
ராஜிவிடம் நடத்திய விசாரணையில், பிண்ட் என்ற இடத்தில் அவர் ஆயுதங்களை தயாரித்து வந்தது தெரிய வந்தது.
இவரிடமிருந்து ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜனக் சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் டில்லியைச் சேர்ந்த ரஷித் என்பவருக்கு ஆயுதங்களை விற்றது தெரிய வந்தது.
ரஷித் ஆயுதங்களை டில்லியில் உள்ள குற்றவாளிகளுக்கு விற்று வந்தார். இதையடுத்து, ரஷித்தும் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்