போபால்: நாட்டில் முதல் முறையாக, மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ படிப்பை பயிலும் திட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார். தாய் மொழியில் கல்வி கற்பது, புரிதலுக்கு எளிமையாக இருக்கும். இதனால், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய படிப்புகளை உள்ளூர் மொழியில் கற்பிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி, நாட்டில் முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பு தொடங்கப்பட உள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, போபாலில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் பாட புத்தகங்களை வெளியிட்டு, இந்தியில் எம்பிபிஎஸ் படிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து, இம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், ‘மருத்துவம், பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்பிக்கவோ, படிக்கவோ முடியாது என்ற எண்ணத்தை இந்த செயல்பாடு மாற்றிவிடும். இந்தி மொழியில் கல்வி கற்பதன் மூலமாக வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான ஒரு படியாக இது அமையும். பயிற்று மொழி ஒருவரின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்பது மோடியின் விருப்பமாகும்,” என்றார்.
*5,568 மணி நேர முயற்சி
போபாலில் உள்ள காந்தி மருத்துவ கல்லூரியில், இந்தாண்டு பிப்ரவரியில் மந்தர் என்ற இந்தி பிரிவு அமைக்கப்பட்டு, எம்பிபிஎஸ் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த குழுவில் இடம் பெற்ற 97 மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், நிபுணர்கள் 5,568 மணி நேரம் கடும் முயற்சி செய்து இதை உருவாக்கி உள்ளனர்.