குழந்தை திருமணம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் என்ன நடக்கிறது?

சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் (நடராஜர்) திருக்கோயில் உலகப் புகழ் பெற்றது. இந்த கோயிலில் பூஜை செய்து வரும் தீட்சிதர்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறைக்கும், காவல்துறைக்கும் தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.

அந்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு குழந்தை திருமணம் செய்ததாக 20க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிலரை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச உள்பட மூன்று பேரை கடலூர் போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 100க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏடிஎஸ்பி அசோகன் மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட தீட்சிதர்களிடம் மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலைமறியலை கைவிடும்படி போலீசார் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் தீட்சிதர்கள் அதனை கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த உள்விவகாரங்களை அறிந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் நம்மிடம் பேசியபோது, “சிதம்பரம் நடராஜர் கோயில் பூசாரிகளுக்கு திருமணமானால்தான் தலைக்கட்டாக ஆகி பூஜை செய்யும் தகுதி கிடைக்கும். பெரும்பாலும் அக மண முறைதான். வெளியில் இருக்கும் யாரும் பெண் தர மாட்டார்கள். கோயில் உள்ளே இருக்கும் பெண்கள், வெளியே சென்று விட்டால் மீண்டும் உள்ளே வர விரும்ப மாட்டார்கள். அதனால் பெண்களுக்கு விபரம் தெரியும்முன்னரே குழந்தை திருமணம் நடந்து விடுகிறது. தன்னிச்சையாக செயல்படுவதால், இதுதவிர ஏராளமான விதிமீறல்களும் நடைபெறுகின்றன. பெரிய இடத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது. எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.