பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) மிகப் பெரிய ராக்கெட்டான ‘எல்விஎம் 3’ முதன்முறையாக வணிகச் சேவையில் கால் பதிக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த ‘ஒன்வெப்’நிறுவனம் இணையப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது அரசு, கல்வி,வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டுக்காக 36 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது.
அந்த செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணிஇஸ்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த 36 செயற்கைக்கோள்கள் வரும் 23-ம் தேதி ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ‘எல்விஎம் 3′ ராக்கெட் மூலம் இரவு 12.07 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளன.
ஜிஎஸ்எல்வி எம்கே 3
‘ஜிஎஸ்எல்வி எம்கே 3’ என்றுஅழைக்கப்பட்டு வந்த ராக்கெட்தான் தற்போது ‘எல்விஎம் 3’ என்று அழைக்கப்படுகிறது. இது43.5 மீட்டர் நீளமும் 640 டன் எடையும் கொண்டது. இந்த ராக்கெட் இதுவரையில் அரசு செயல்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதன்முறையாக வணிகச் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம்மற்றும் பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனம் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஒன்வெப்நிறுவனத்தின் செயற்கைக்கோள் களை ‘எல்விஎம் 3’ விண்ணில் ஏவுகிறது. இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் வழியே ‘எல்விஎம் 3’ சர்வதேச வணிகச் சேவை சந்தையில் நுழைகிறது” என்று தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஒன்வெப் நிறுவனத்தில் பெரும் முதலீடு மேற்கொண்டு, அந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.