தெஹ்ரான்: ஹிஜாப் அணியாமல் சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை நாடு திரும்புவதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
மாஷா அமினியின் மறைவு, ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வைத்துள்ளது. ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டத்திலிருந்து அதாவது 1979 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்தால் மட்டுமே அனுமதி உண்டு.
இந்த நிலையில் மாஷா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்டோபர் 16 ஆம் தேதி தென்கொரியாவில் நடந்த தடை ஏறும் போட்டியில் ஈரான் வீராங்கனை எல்னாஸ் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார். இதற்காக எல்னாஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் நாடு திரும்புவதைத் தொடர்ந்து தனது செயலுக்காக எல்னாஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதுகுறித்து எல்னாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொருத்தமற்ற நேரத்தாலும், எதிர்பாராத விதமாக சுவரில் ஏறும்படி என்னை அழைத்ததாலும், தற்செயலாக என் தலையை மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கான நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
In a historic move, Iranian athlete Elnaz Rekabi who represented Iran at the Asian Climbing Competitions finals in Seoul, competed without hijab, disobeying the Islamic Republic’s restrictions for female athletes. pic.twitter.com/KvxE5NoQLi
— Iran International English (@IranIntl_En) October 16, 2022
பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார்.
மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமாகியுள்ளது.