திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்தில் அங்கபிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும், டிசம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளும் நாளை காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்கள் முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
இதுதவிர டிசம்பர் மாதத்திற்கான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான எலக்ட்ரானிக் டிப் (குலுக்கல்) 22ம்தேதி காலை 10 மணி முதல் 24ம்தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யப்பட உள்ளது. 24ம் தேதி காலை 11 மணிக்கு பிறகு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு இ-மெயில், மொபைல் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும். பிறகு கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகள் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி ஆஸ்தானம் வரும் 24ம்தேதி நடக்கிறது. இதனால் அன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 23ம்தேதியன்று பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது. வரும் 25ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகண நாட்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடைக்கான தரிசனம், ₹300 சிறப்பு நுழைவு டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.