திமுகவில் இருந்து முக்கியப் புள்ளி நீக்கம்… என்ன நடந்தது? ஏன் இந்த அதிரடி?

பொதுச் செயலாளர் துரைமுருகன் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையில் கழக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், கழக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தல் தான் திமுகவில் பூதாகரமாக வெடித்துள்ளதாம். கட்சி தலைமை எந்தவொரு கருத்தும் முன்வைக்காத நிலையில் கழக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சனக் கருத்தை தெரிவித்திருக்கிறார். அதாவது, காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் முறையையும், தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே குறித்தும் விமர்சனம் செய்துள்ளார்.

இது காங்கிரஸ் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்து முடிந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூரை தோற்கடித்து மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் நேரு குடும்பத்தை சேராத ஒருவர் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு வந்திருக்கிறார். இவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி புத்துணர்வு பெறுமா? இழந்த செல்வாக்கு மீட்கப்படுமா? என்றெல்லாம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக உடன் கூட்டணியும், நட்புறவையும் காங்கிரஸ் கட்சி வைத்திருக்கும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் இப்படி பேசிட்டாரே? எனக் குமுறல்கள் வெளிவரத் தொடங்கின. இந்த விஷயம் ஸ்டாலின் காதுகளுக்கு எட்டவே, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதன்மூலம் காங்கிரஸ் உடன் இணக்கமான சூழலை கடைபிடிக்க திமுக விரும்புவதை பார்க்க முடிகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதில் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? இல்லை மூன்றாவது அணியில் திமுக கைகோர்க்குமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் திமுக தலைமையின் நடவடிக்கை இரண்டாவது அணி தான் என்பதை உறுதி செய்வதாக கூறப்படுகிறது. இருப்பினும் 2024ஆம் ஆண்டிற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.