`கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்?’… `தகவல்கள் இல்லை’ – ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அமைச்சகம் பதில்

அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் திட்ட மேலாண்மை நிறுவனம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, எப்போது தொடங்கும் என தெரியாது என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு கொடுத்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எய்ம்ஸ்

சமீபகாலமாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும் என்பது காமெடியாகி வருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு 90 சதவிகிதம் நிதி ஒதுக்கி பூர்வாங்கப்பணிகள் முடிந்து விட்டதாக கடந்த மாதம் மதுரை வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தது பரபரப்பை உண்டாக்க, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூரும், சு.வெங்கடேசனும் சென்று ‘கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணோம்’ என்று கிண்டல் செய்ய, அதற்கு பா.ஜ.கவினர் விளக்கம் அளிக்க என்று தமிழக அரசியல் களமே பரபரப்பானது.

2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ்க்கு ஜூன் 2018 ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. 6 மாதங்கள் கழித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019  நாடாளுமன்றத் தேர்தல்  நெருங்கிய நேரத்தில் 27.01.2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. மார்ச் 2021-ல் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும்  கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான தற்காலிக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் எம்.பிக்கள்

தற்போது எய்ம்ஸ் கட்டுமான நிலை குறித்து தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேட்ட ஆர்.டி.ஐ கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அளித்த பதிலில், “திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2026-ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும். கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் இல்லை, மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான 1977.8 கோடியில், 82 சதவீதமான 1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைய்கா நிறுவனம் வழங்கும், 20 சதவிகிதத் தொகையான ரூ 350.1 கோடியை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்கும், சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் உள்பட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளது, அதற்காக ரூ 12.35 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாண்டியராஜா, “தமிழ்நாட்டுக்குப் பின் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் திறப்பு விழா கண்டு வருகிறது. ஆனால் மதுரை எய்ம்ஸ்-க்கு மட்டுமே காரணங்கள் கூறப்பட்டு தாமதிக்கப்பட்டு வருகிறது.

பாண்டியராஜா

நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து என்று காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் தற்போது திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்தல், வரைபடம் தயாரித்தல், கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்தல் என இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பது மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே மேலும் காலதாமதம் செய்யாமல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஜனவரி 2019 ஆம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.