ராமநாதபுரம்: வரும் அக்.30-ம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 60-வது குருபூஜை விழா மற்றும் 115-வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, நவாஸ்கனி எம்பி, எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), செ.முருகேசன்(பரமக்குடி) ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வின்போது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியது: “கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா தொற்றால் அதிக மக்கள் வராத நிலையில் இந்த ஆண்டு அதிகளவு மக்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏகள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்விழாவையொட்டி அஞ்சலி செலுத்த வருவோரின் வசதிக்காக சாலை, மின்சாரம், குடிநீர் மற்றும் தற்காலிக கழிப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படும். அதேபோல் பொது சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ முகாம் அமைக்கப்படும். காவல் துறையின் மூலம் முழுமையான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே விழா சிறப்புடன் நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத்தர வேண்டும்” என தெரிவித்தார்.
அப்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன்குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி இயக்குநர் ஊராட்சிகள் பரமசிவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.