வாஷிங்டன் :அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர், தங்கள் வீடுகளில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை துவக்கினர்.
அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நியூயார்க் நகரின், ‘டைம்ஸ்’ சதுக்கத்தில் கடந்த 15ம் தேதியே கொண்டாட்டங்கள் துவங்கின.
இந்நிலையில், தலைநகர் வாஷிங்டனில் சிறப்பான கொண்டாட்டத்துக்கு அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் வாஷிங்டன் வந்தவண்ணம் உள்ளனர்.துணை அதிபர் கமலா ஹாரிஸ் வீட்டில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விருந்தில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.
வெள்ளை மாளிகையில் நாளை மறுநாள் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்க உள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளிங்கன், தன் துறை சார்பாக வரும் 26ம் தேதி தீபாவளி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்; துாதரக அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
ப்ளோரிடாவின் மாராலாகோ என்ற இடத்தில் உள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் நேற்று தீபாவளி விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர். ‘பாலிவுட்’ திரைப்பட பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சியுடன், தடபுடலான விருந்தும் நடந்தது.
தீபாவளி பண்டிகை தினத்தில், நியூயார்க் நகர பள்ளிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக அந்நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement