யாங்கூன், மியான்மரில், ராணுவத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, பள்ளி ஆசிரியர் ஒருவரின் தலையை துண்டித்து, ராணுவத்தினர் வாசல் கதவில் தொங்கவிட்டது, பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தேர்தல் நடைபெற்று ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சி ஆட்சி அமைத்தது.
ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும், ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் வெறித் தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மியான்மரில் மிக்வே மாகாணத்தில் உள்ள தவுங்மையிட் கிராமத்தைச் சேர்ந்த சா டுன் மொய், ௪௬, என்ற பள்ளி ஆசிரியர், ராணுவத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் பணிபுரிந்த பள்ளிக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டார்.
கடந்த ஓர் ஆண்டாக மூடிக்கிடக்கும் அப்பள்ளியின் முன், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது.
பின், அந்த தலையை பள்ளியின் வாசல் கதவில் தொங்கவிட்டு, ராணுவத்தினர் சென்றுவிட்டனர். இந்த கொடூர கொலைச் சம்பவத்தால், மியான்மர் நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement