உக்ரைன் பூங்காவில் உள்ள கங்காரு, ஒட்டகம் விலங்குகளை கொன்று சாப்பிட்டு உயிர் பிழைத்த ரஷிய வீரர்கள்

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 254-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

போரில் கைப்பற்றிய உக்ரைனின் சில நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதனை தொடர்ந்து போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.

ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் போரின் போக்கு 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாகி வருகிறது.

இந்நிலையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனட்ஸ் நகரை மீட்க உக்ரைன் படையினர் போரிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த டோனட்ஸ் மாகாணத்தின் யப்பில் கிராமத்தை உக்ரைன் படைகள் கடந்த சில நாட்களுக்கு முன் மீட்டது.

யப்பில் கிராமத்தில் விலங்குகள் பூங்கா ஒன்று உள்ளது. ரஷிய படைகள் கைப்பற்றுவதற்கு முன்னர் அந்த பூங்காவில் 2 ஒட்டகங்கள், கங்காரு, காட்டெருமை, பன்றிகள், நரிகள் உள்ளிட்ட விலங்களும், பறவைகளும் இருந்தன.

ஆனால், ரஷிய படையிடமிருந்து தற்போது யப்பில் கிராமம் மீட்கப்பட்ட நிலையில் அங்கு பூங்காவில் இருந்த விலங்குகள் அனைத்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. பூங்காவை சுற்றிலும் காங்காரு, ஒட்டகம், பன்றிகளில் உடல்பாகங்களும், எலும்பு கூடுகளும் கிடக்கின்றன.

போரின் போது உணவுதட்டுப்பாட்டின் போது பசியின் காரணமாக ரஷிய வீரர்கள் பூங்காவில் உள்ள ஒட்டகம், பன்றி, கங்காரு போன்ற விலங்குகளை கொன்று சாப்பிட்டுஉயிர் பிழைத்துள்ளதாக உக்ரைன் மீட்பு குழுவில் பணியாற்றும் தொண்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.