கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு சக மாணவர் பேருந்து நிலையத்தில் வைத்து மஞ்சள் கயிறு கட்டிய வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, அக்டோபர் 10ஆம் தேதி அந்த மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். தொடர்ந்து, மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு அரசுபெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்த போது மாணவியை சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக கூறி அந்த பெண்ணை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தனர்.இதை அடுத்து மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தொடர்ந்து நீதிபதிகள், “முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் மாணவியை அரசு காப்பகத்தில் தங்க வைத்த காவல்துறை மற்றும் குழந்தைகள் நலக்குழு” செயலுக்கு அதிருப்தி தெரிவித்தது. அத்துடன் மாணவனுக்கு எதிராக பதிவாகிய வழக்கில் போலீசாரின் நடவடிக்கைகள் பற்றிய முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய சிதம்பரம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.