புதுச்சேரி: புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ‘‘புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது நமக்கு வரபிரசாதமாக இருக்கக்கூடும். பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில் முதல்கட்டமாக இந்தியா முழுவதும் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது. இதில் புதுச்சேரியில் 53 பேருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே காவல் துறையில் 400 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 1,400 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொழில்துறை மூலம் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இது பல ஆண்டுகளாக தீர்க்கமுடியாமல் இருந்து வந்தது. கடந்த அரசுகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்த அரசு வந்த பிறகு சேதராப்பட்டில் 750 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் புதுச்சேரியின் பொருளாதாரம் வளரும். புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
புதுச்சேரியில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. பெஸ்டு புதுச்சேரியாக மாற்ற முதல்வருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். புதுச்சேரி-விழுப்புரம் சாலை ரூ.92 கோடியில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விமான நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. வில்லியனூர், ஏனாமில் தலா 500 படுக்கைகள் கொண்ட இரு மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படவுள்ளன.
மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆனாலும், வெளியுறவுத் துறையின் உதவியுடன் இலங்கை அரசிடம் பேசி அவர்களை மீட்டு வருகின்றோம். இலங்கை வேறு நாடு. அந்நாட்டுக்கென தனிச்சட்டங்கள் இருக்கின்றது. ஆனாலும், மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.