சென்னை: நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார். இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா, சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், மத்திய இணை அமைச்சர் ஷ்ரிபத் நாயக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கடல் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு முடித்த 3,580 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேசியதாவது: பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கடல் சார்ந்த படிப்பு பயின்ற மாணவர்கள், தற்சார்பு இந்தியா திட்டத்தை செயல்படுத்த நாட்டுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மத்திய கப்பல் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் 2030 தொலைநோக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடல்சார் வணிகம், கல்வி, ஆராய்ச்சியில் முன்னணி நாடாக இந்தியா மாறும்.
இந்த திட்டத்தின்படி, உலகத் தரம் வாய்ந்த துறைமுகங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய கடல்வழி வாணிப பங்கை12-ல் இருந்து 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கடல் சார்ந்த துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. மாணவர்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை உலகின் 170 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. நாட்டின் பாரம்பரிய மருந்துகள் ஏற்றுமதி 2014-ம் ஆண்டு 3 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த 8 ஆண்டுகளில், அந்த எண்ணிக்கை 18.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைய மாணவர்கள், இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சிக்கான மையத்தை அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.