புதுடில்லி, ‘ஜன கன மன’ எனத் துவங்கும் நம் தேசிய கீதத்துக்கு வழங்கும் அதே மரியாதையை, ‘வந்தே மாதரம்’ எனத் துவங்கும் தேசிய பாடலுக்கும் மக்கள் அளிக்க வேண்டும் என, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், தேசிய பாடலுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய கீதத்துக்கு வழங்கும் அதே மரியாதையை, தேசிய பாடலுக்கும் நம் நாட்டு மக்கள் வழங்க வேண்டும். நம் தேசிய பாடலானது மக்களின் உணர்வுடன் இணைந்தது. இந்த விவகாரத்தில், நீதிமன்றங்கள் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
தேசிய பாடலை பிரபலப்படுத்தவும், அதை பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொது நிகழ்ச்சிகளில் இசைப்பதை உறுதி செய்யவும் கோரி ஏற்கனவே வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
தேசிய பாடல் குறித்து, நம் அரசியல் சாசனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்த விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதனால், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தேவையில்லாத ஒன்று.
அதே நேரத்தில், மக்களின் உணர்வுகளுடன் இணைந்துள்ளதால், தேசிய கீதத்துக்கு இணையாகவே தேசிய பாடலும் பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement