முன்பதிவு தொடங்கியது… தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்- அதுவும் சேலம் வழியாக!

நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதாவது, கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 07385 என்ற எண் கொண்ட விஜயபுரா – கோட்டயம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் வரும் 21, 28, டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. விஜயபுராவில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில், பாகல்கோட், ஹூப்ளி, எலகங்கா, எர்ணாகுளம், பாலக்காடு,

கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட், ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு அடுத்த நாள் மாலை 5.22 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 3 நிமிடங்கள் கழித்து 5.25 மணிக்கு புறப்படுகிறது. ஈரோட்டிற்கு மாலை 6.20 மணிக்கும், திருப்பூருக்கு மாலை 6.58 மணிக்கும், கோவைக்கும் இரவு 8.07 மணிக்கும், பாலக்காடு இரவு 9.35 மணிக்கும், கோட்டயத்திற்கு நள்ளிரவு 2.20 மணிக்கும் சென்றடைகிறது.

இதேபோல் மறுமார்க்கத்தில் 07386 என்ற எண் கொண்ட கோட்டயம் – விஜயபுரா வாராந்திர சிறப்பு ரயிலானது (புதன்கிழமை தோறும்) கோட்டயத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படுகிறது. எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம், பாகல்கோட் வழியாக விஜயபுரா செல்கிறது.

எர்ணாகுளத்தில் மாலை 5.10 மணிக்கும், திருச்சூரில் மாலை 6.27 மணிக்கும், பாலக்காட்டில் இரவு 9.37 மணிக்கும், கோவையில் இரவு 11.17 மணிக்கும், திருப்பூரில் நள்ளிரவு 12.03 மணிக்கும், ஈரோட்டில் நள்ளிரவு 12.50 மணிக்கும், சேலத்தில் அதிகாலை 1.47 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு அதிகாலை 5.38 மணிக்கும் சென்றடைகிறது. அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு விஜயபுராவிற்கு சிறப்பு ரயில் சென்றடைவது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் வரும் 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28, ஜனவரி 4, 11,18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த இரு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை பயணிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.